jaga flash news

Saturday 22 December 2012

பட்டீஸ்வரர் கோயில் , பேரூர் ஸ்தல புராணம்


பட்டீஸ்வரர் கோயில் , பேரூர் ஸ்தல புராணம்

பட்டீஸ்வரர் கோயில் , பேரூர்

தல வரலாறு
முற்காலத்தில் இங்கு ஒரு புற்றிற்குள் சிவன் லிங்கமாக எழுந்தருளியிருந்தார். தேவலோக பசுவான காமதேனு, நாரதரின் ஆலோசனைப்படி இங்கு வந்து, புற்றில் பால் சுரந்து சிவனை வழிபட்டது. ஒருசமயம் காமதேனுவின் கன்றான பட்டி, அறியாமல் புற்றை மிதித்துவிட்டது. தன் கன்று செய்த தவறை மன்னிக்கும்படி காமதேனு, சிவனை வேண்டியது. புற்றி லிருந்து வெளிப்பட்ட சிவன் இருவரையும் ஆசிர்வதித்தார். பட்டி மிதித்து வெளிப்பட்டதால் இவர், “பட்டீஸ்வரர்’ என பெயர் பெற்றார். “கோஷ்டீஸ்வரர்’ என்றும் இவருக்குப் பெயருண்டு. மூலஸ்தானத்தில் லிங்கத்தின் பின்புறம் காம தேனுவின் சிற்பம் உள்ளது.
கனகசபை நடராஜர்
சிவனின் நடனம் காண விரும்பிய மகாவிஷ்ணு பட்டிமுனி என்ற பெயரில் இடையனாகவும், பிரம்மா கோமுனியாக பசு வடிவிலும் இங்கு வந்தனர். சுவாமி நடராஜராக வந்து அவர்கள் முன் நடனமானடினார். இந்த நடராஜர் இங்குள்ள கனகசபையில் எழுந்தருளியிருக்கிறார். அருகில் கோமுனி, பட்டிமுனி இருக்கின்றனர். பங்குனி உத்திரத்தன்று நடனக்காட்சியருளும் வைபவம் நடக்கும். தத்துவங்கள் மற்றும் வேதத்தை குறிக்கும் தூண்கள், 3 பஞ்சாட்சர படிகள் என விசேஷமாக அமைந்த சபை இது. இச்சபையில் உள்ள தூண்கள் வேலைப்பாடு மிக்கவை.
வருடத்தில் 10 அபிஷேகம்!
நடராஜருக்கு வருடத்திற்கு 6 முறைதான் அபிஷேகம் நடக்கும். ஆனால், இங்கு 10 முறை நடக்கிறது. வழக்கமான நாட்கள் தவிர, தீபாவளி, மார்கழி திருவாதிரை முடிந்த நான்காம் நாள், பங்குனி உத்திரம் மற்றும் உத்திரத்திற்கு அடுத்த இரண்டாம் நாள் ஆகிய நான்கு நாட்கள் இவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
அம்பாள் இல்லாத கோயில்
கோயிலுக்கு வடக்கே சற்று தூரத்தில் இறவாப்பனை மரத்தின் அருகில் பிரம்மா பூஜித்த வடகயிலாயநாதரும், தென்திசையில் மகாவிஷ்ணு பூஜித்த தென்கயிலாய நாதரும் கோயில் கொண்டு உள்ளனர். இவ்விரு கோயிலிலும் அம்பிகை கிடையாது.
கொம்பு தீர்த்தம்
பட்டீஸ்வரரை வழிபட்ட காமதேனு தன் கொம்பால் பூமியில் தோண்டி உண்டாக்கிய “சிருங்க தீர்த்தம்’ (சிருங்கம் என்றால் கொம்பு) இங்குள்ளது. இந்த தீர்த்தத்தாலேயே சுவாமிக்கு அபிஷேகம் நடக்கிறது.
மரங்களின் தத்துவம்
இறவாப் பனை, பிறவாப் புளி என்ற மரங்கள் இத்தலத்தில் உள்ளன. பட்டீசுவரரை தரிசிப்பவர்கள் வாழும்போது இறவாத (அழியாத) புகழுடனும், வாழ்க்கைக்கு பிறகு மீண்டும் பிறப்பில்லாத நிலையையும் அடைவர் என்பதை இம்மரங்கள் உணர்த்துகின்றன.
கல்வி தெய்வங்கள்
இங்குள்ள பைரவர் ஞானம் தருபவராக நாய் வாகனமின்றி காட்சி தருகிறார். இங்குள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில், விஜயதசமியன்று குழந்தைகளின் நாக்கில் எழுத்தாணியால் எழுதும் “அட்சராப்பியாச வைபவம்’ நடக்கிறது. வியாழக்கிழமைகளில் பைரவர், தெட்சிணாமூர்த்தி சன்னதிகளில் கல்விக்காக வேண்டுகிறார்கள்.
மனோன்மணி
சக்தியின்றி சிவமில்லை என்பதன் அடிப்படையில், சிவன் கோயில்களில் மூலஸ்தானத்திற் குள்ளேயே ஒரு அம்பிகை இருப்பாள். இவளை வெளியிலிருந்து தரிசிக்க முடியாது. “சிவனின் மனதிற்குள் இருப்பவள்’ என்ற பொருளில் இவளை மனோன்மணி என்று அழைப்பர். இந்தக் கோயிலை பொறுத்தவரை இவளை நம்மால் தரிசிக்க முடியும். பிரகாரத்தில் இவளுக்கு சன்னதி இருக்கிறது..
தீவட்டி சேவை
இக்கோயிலில் இரண்டு தீவட்டிகள் உள்ளன. இங்கு வந்த மன்னர் ஒருவர், சுவாமிக்கு மரியாதை செய்யும்விதமாக தீவட்டிசேவையை துவங்கி வைத்தார். தினமும் மாலையில் இந்த தீவட்டிகளை கொளுத்தி, கோயில் எதிரேயுள்ள தீபஸ்தம்பத்தை சுற்றி வந்து, பின்பு அதை தலைகீழாக கவிழ்த்து வைக்கின்றனர். சுவாமிக்கு மரியாதை செய்யும்விதமாக இவ்வாறு செய்வதாகச் சொல்கிறார்கள்.
திருப்பொற்சுண்ணம்
கிராமங்களில் விழா கொண்டாடும்போது மக்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீர் தெளித்து மகிழ்வர். இதைப்போலவே இக்கோயிலில் மார்கழி திருவாதிரை விழாவின்போது சுவாமி மீது மஞ்சள் நீர் தெளித்து, பின் அதையே பக்தர்கள் மீது தெளிக்கின்றனர். இந்த மஞ்சள் நீருக்கு, “திருப்பொற்சுண்ணம்’ என்று பெயர். இதற்காக பிரத்யேகமாக உள்ள உரலில் மஞ்சளை பொடியாக்குகின்றனர்.
காட்டிக்கொடுத்த நந்தி
தேவாரம் பாடியவரும், சிவனின் நண்பருமான சுந்தரர் சில விஷயங்களுக்காக பொருள் கேட்பதற்காக இங்கு வந்தபோது, அவரிடம் விளையாட்டு காட்ட விரும்பிய சிவன், அம்பிகையுடன் விவசாயி வேடம் தரித்து அருகிலுள்ள வயலுக்கு சென்று நாற்று நட்டுக் கொண்டிருந்தார். கோயிலுக்குள் சென்ற சுந்தரர் இறைவனைக் காணாமல் திகைத்தார். தன் இறைவனான சிவனின் பக்தன் படும் வேதனையைத் தாளாத நந்தி, தான் மாட்டிக்கொள்வோம் எனத்தெரிந்தும், சிவன் இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார். வயலுக்குச் சென்ற சுந்தரர், சிவனை வணங்கி பதிகம் பாடி பொருள் கேட்டார். தன்னைக் காட்டிக் கொடுத்ததால் கோபம் கொண்ட சிவன், மண்வெட்டியால் நந்தியின் தாடையில் அடித்தார். ஆனாலும், நந்தி வருந்தவில்லை. தன்னை வருத்தியேனும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை இந்த சம்பவம் வலியுறுத்துகிறது. இந்நிகழ்ச்சியின் அடிப்படையில் இங்குள்ள நந்தியின் தாடை வெட்டுப் பட்ட நிலையில் இருக்கிறது.
நாற்று நடும் திருவிழா
ஆனியில் நாற்று நடும் திருவிழா இங்கு விமரிசையாக நடக்கிறது. விழாவின் முதல் நாள் கோயில் அருகிலுள்ள வயலில் விதை நெல் விதைப்பர். தினமும் காலை, மாலையில் நாற்றுக்கு பூஜை நடக்கும். விழாவின் 9ம் நாளில் அர்ச்சகர்கள் நாற்று நடுவர். இவ்வேளையில் கேதாரீஸ்வரர் (சிவன்), அம்பாள், சுந்தரர் மூவரும் வயலுக்கு எழுந்தருளுவர். சுந்தரர் இங்கு வந்தபோது சிவன் விவசாயியின் வேடத்தில் நாற்று நட்டதன் நினைவாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்வாண்டு இந்த விழா ஜூன் 28ல் நடக்கிறது. மறுநாள் நடராஜருக்கு ஆனித்திருமஞ்சனம் நடக்கும்.
பயிர்களின் தாய்
விவசாயியாகச் சென்ற சிவனுடன் வயலில் வேலை செய்ததால், இத்தல அம்பிகைக்கு பச்சை நாயகி என்று பெயர். நல்ல மகசூல் பெறவும், பயிர்கள் குறையின்றி செழிப்பாக வளரவும் இவளது சன்னதியில் விதை நெல், தானியத்துடன் பூஜிக்கிறார்கள். கார்த்திகை மாத திங்கள்கிழமைகளில் இவளது சன்னதியில் விவசாயம் செழிக்க விசேஷ பூஜை நடக்கும்.
அம்பாள் சன்னதி முன்புள்ள துர்க்கை சிலை, நடராஜரின் பாத தரிசனத்தைக் காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அருகில் வரதராஜப் பெருமாளுக்கும் சன்னதி உள்ளது.
சிவாலயத்தில் சொர்க்கவாசல்
பெருமாள் கோயில்களில் தான் சொர்க்கவாசலைக் காண முடியும். ஆனால், இந்த சிவாலயத்திலும் சொர்க்கவாசல் இருக்கிறது. பங்குனி உத்திரம், மார்கழி திருவாதிரையன்று நடராஜர், சிவகாமி அம்பாள் ஆகியோர் வீதியுலா செல்வர். கோயிலுக்குத் திரும்பும் போது, சிவகாமி அம்பாள் மட்டும் இந்த வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைவாள். அண்ணன் மகாவிஷ்ணுவிற்குரிய வாசலில் தங்கையான அம்பிகை உரிமையுடன் நுழைவதாகச் சொல்கிறார்கள்.
அரூப சித்தர்
சிவன் சன்னதிக்குப் பின்புறம் விஸ்வநாதர்,  விசாலாட்சி சன்னதிகள் உள்ளன. இவற்றுக்கு நடுவேயுள்ள சன்னதியில் தண்டாயுதபாணி காட்சி தருகிறார். அருணகிரியாரால் பாடல் பெற்றவர். இந்த சன்னதி அருகிலுள்ள வில்வ மரத்தடியில் கோரக்க சித்தர் அரூபமாக (உருவமில்லாமல்) அருளுகிறார்.
நாட்டியத்துளிகள்…
* நாவுக்கரசர், சுந்தரர் இருவராலும் பாடப்பெற்ற தலம்.
* இங்குள்ள காஞ்சிமாநதியில் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்கிறார்கள்.
* கொடிமர மண்டபத்தின் மேலே நாயன்மார்களின் வரலாற்று ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது. கனகசபையின் விதானத்தில் சுழலும் தாமரையுடன் கூடிய கல்சங்கிலி வேலைப்பாடுமிக்கது.
* பிரகாரத்தில் ஈட்டி மரத்தால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் இருக்கிறார்.
இருப்பிடம்
கோயம்புத்தூரில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் பேரூர் உள்ளது. காந்திபுரம், டவுன்ஹாலில் இருந்து பஸ்கள் செல்கின்றன.
திறக்கும் நேரம்
காலை 6- 1 மணி, மாலை 4- இரவு 9 மணி.

No comments:

Post a Comment